“இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வந்துவிட முடியாது. சாதி, மத, மொழி அடிப்படையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வர நாட்களாகும்” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனுார் மகிமைதாஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “சாதி, மத, மொழி அடிப்படையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது என்பது ஊழல் நடவடிக்கை. வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த 2017-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தேர்தல் காலகட்டங்களிலும், தேர்தல் அல்லாத நேரங்களிலும் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அந்த கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அரசியல் சுயலாபத்துக்காக சாதி, மத, மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையைத் தூண்டுகின்றனர்.
இது ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், அரசியல் கட்சிகள் நாட்டு மக்களிடம் பிரித்தாளும் கொள்கையை கடைபிடிப்பது சட்ட விரோதமானது. தேர்தல் நேரங்களில் மட்டும் சாதி, மத, மொழி ரீதியாக வாக்காளர்கள் பிளவுபடுத்தப்படுவதை தடுக்க முடிந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் இந்திய தேர்தல் ஆணையம், அதன்பிறகு இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டுகொள்வதில்லை. நாடு முழுவதும் இதற்காக தனியாக எந்த ஒழுங்குமுறை அமைப்பும் இல்லை.
எனவே சாதி, மத, மொழி ரீதியாக நாட்டு மக்களிடம் எந்த பாகுபாடும் பார்க்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பொது மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த தூதர்களை நியமிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தையும் அமைக்க உத்தரவிட வேண்டும்,” என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், “தேர்தல் பிரச்சாரம் சாதி, மத, மொழி அடிப்படையில் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது,” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பெரிய நாட்டில் மாற்றத்தை ஒரே இரவில் கொண்டு வந்துவிட முடியாது. ஜனநாயகத்தில் இந்தியா அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்னும் குழந்தை பருவத்தில் தான் உள்ளது. சாதி, மத, மொழி அடிப்படையில் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வர இன்னும் சில காலம் பிடிக்கும். அப்போது அரசியல்வாதிகளும் சாதி, மத, மொழி அடிப்படையில் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என நம்புவோம்,” என கருத்து தெரிவித்தனர்.