நில அபகரிப்பு வழக்கிலும் என்னை சேர்த்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உள்ளாக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் மனித உரிமை கமிஷனில் போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனம், இன்ஸ்பெக்டர்கள் ரவி, பூபாலன், சங்கர நாராயணன், மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் அனந்தராமன், இன்ஸ்பெக்டர் பிரபா, உதவி இன்ஸ்பெக்டர் தனஞ்செயன் ஆகியோர் மீது புகார் அளித்துள்ளார். புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளராகவும் கழக வழிகாட்டு உறுப்பினராகவும் சட்ட ஆலோசனை குழு உறுப்பினராகவும் வடசென்னை மாவட்ட செயலாளராகவும் பொறுப்பில் இருந்து வருகிறேன். கடந்த 35 வருடங்களாக அரசியலில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் சபாநாயகராகவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளேன்.
உள்ளாட்சி மன்ற தேர்தலில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கள்ள ஓட்டு போடுவதை அறிந்தேன். பல்வேறு குற்றவழக்குகளில் தண்டனை பெற்றுள்ள நரேஷ் என்பவர் கையில் ஆயுதங்களுடன் பொதுமக்களை பயமுறுத்தி வாக்குச்சாவடிகளில் இடையூறு செய்ததால் பிடித்து காவலரிடம் ஒப்படைத்தேன். அவர் மீது 11-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த 20.12.2002 அன்று இரவு 8 மணிக்கு வீட்டில் நான் உணவருந்த முற்பட்ட போது 70-க்கும் மேற்பட்ட காவலர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என்னை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர், உடைமாற்ற அனுமதிக்கவில்லை. நாற்காலியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். மருந்து மாத்திரைகள் எடுக்க அனுமதிக்கவில்லை. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசியல் கைதிகளுக்கான முதல் வகுப்பு வசதிகள் இல்லாத பூந்தமல்லி சிறையில் கொசுக்கடிக்கு இடையில் அடைத்தனர். 2 நாட்கள் அங்கேயே வைத்தனர்.
நரேஷ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற நடுவரால் எனக்கு முதல் வகுப்பு வசதிகள் அளிக்க அறிவுறுத்தியும் தரப்படவில்லை. கைது நடவடிக்கையின்போது காவல் துறை கடைபிடிக்க வேண்டிய உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை கடைபிடிக்கவில்லை. பின்னர் என்னை புழல் சிறைக்கு மாற்றினர். என்மீது பொய் வழக்கு போட்டனர். மன உளைச்சலுக்கும் அவமானத்துக்கும் உள்ளாக்கினர். பழிவாங்கும் நோக்கோடு எனக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறலை நீதிபதியிடம் தெரிவித்தேன். நில அபகரிப்பு வழக்கிலும் என்னை சேர்த்து ஆலந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உள்ளாக்கப்பட்டேன். வழக்கு குறித்த எவ்வித சம்மனும் எனக்கு அனுப்பவில்லை.
எனது மருமகன் நவின் குமாருக்கும் அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் இடையில் உள்ள சொத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் விசாரணை நடத்தும்படி கோர்ட்டு போலீசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டு உள்ள நிலையில் என்னையும் எனது மகள் ஜெயப்பிரியாவையும் வழக்கில் சேர்த்ததற்கு எதிராக மான நஷ்ட ஈடு தொடர்பான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காவல் துறையின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தால் எனக்கு அங்கீகரிக்கப்பட்டு உள்ள தனிமனித உரிமைக்கு எதிரானது. ஒரு தலைபட்சமாக வழக்கு பதிந்து பாரபட்சமாக செயல்பட்டுள்ளனர். எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ளனர். இவை அனைத்தும் எனக்கு ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் ஆகும். நடந்த சம்பவங்களை பதிவு தபால் மூலம் மனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பி இருக்கிறேன். இப்போது புகாராக அளித்து இருக்கிறேன். எனவே மனித உரிமை ஆணையம் இந்த மனுவை விசாரித்து 8 எதிர்மனுதாரர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து நியாயம் வழங்க வேண்டும். இச்சம்பவங்களால் எனக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களுக்காக அவர்களின் சம்பளத்தில் இருந்து உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டுகிறேன். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.