ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு மாநில கொள்கையினை வெளியிட்டு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15.81 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.27) திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப்.27) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையை வெளியிட்டார். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.
ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழக அரசு கொள்கை: இக்கொள்கையில், ஆதரவற்று பொது இடங்களில் உலாவும் மன நோயர்களை அடையாளம் கண்டு மீட்பது உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ‘பயனாளிகளின் நலனை மையமாகக் கொண்ட, அவர்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்திய அணுகுமுறை மற்றும் அரசு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் வழியாக’ முழுமையான மனநல மருத்துவ சேவைகள் வழங்குவது குறித்த நெறிமுறைகள் மற்றும் இச்சேவையில் பங்காற்றக்கூடிய பல்துறை அலுவலர்களின் பொறுப்புகள் தொடர்பான விரிவான வழிமுறைகளை தெளிவுபடுத்துகிறது.
ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை, இடைநிலை மருத்துவ கவனிப்பு, நீண்ட கால பராமரிப்பு, மறுவாழ்வு மற்றும் சமூகத்துடன் மீண்டுமிணைதல் உள்ளிட்ட நான்கு நிலைகளிலான கவனிப்பை இக்கொள்கை வரையறுக்கிறது. மனநல சிகிச்சை முடிந்து குணமடைந்த ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களை கண்டறிந்து, அவர்களை குடும்பத்துடன் மீண்டும் சேர்த்து வைக்கவும், குடும்பத்துடன் மீண்டுமிணைய சாத்தியமில்லாதவர்களுக்கு தேவையான நல்லாதரவையும் பாதுகாப்பையும் வழங்க வலியுறுத்துகிறது.
இடைநிலை கவனிப்புக்கு பின்னாலான நீண்ட கால பராமரிப்பு மற்றும் சமூகத்துடன் மீண்டுமிணைதல் தொடர்பான மறுவாழ்வு சேவைகள் பற்றி இக்கொள்கை விளக்குகிறது. இச்சேவைகளை செயலாக்கத்துக்கு கொண்டு வருவதை மாநில அளவில் மேற்பார்வையிட மாநில மனநல ஆணையத்திற்கும், மாவட்ட அளவில் கண்காணிக்க மாவட்ட மனநல குழுவுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வகையில், ஆதரவற்ற மனநோயர்கள் நோயில் இருந்து மீண்டு, நலம் பெற்று சமூகத்தில் மதிப்புமிகு உறுப்பினர்களாக வாழத் தேவையான திட்டங்களையும், சேவை வழங்குவோரின் பொறுப்புகளையும் உள்ளடக்கிய இக்கொள்கையை வெளியிடுவதன் மூலம், ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சேவைகளை வழங்கி, ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லாத மாநிலமாக தமிழகத்தை திகழச் செய்ய அரசு உறுதியேற்றுள்ளது.
“கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள்: தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் ஒருங்கிணைந்த போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கிட அரியலூர், தருமபுரி, ஈரோடு, திருவாரூர், கிருஷ்ணகிரி, மதுரை, சென்னை, தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்.
சென்னை, கிண்டி-கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்பாக்கம்-அரசு மனநல காப்பகம் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15.81 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை தமிழக முதல்வர் இன்றையதினம் திறந்து வைத்தார். ஒவ்வொரு மையத்துக்கும் மனநல மருத்துவர் தலைமையில், ஆற்றுப்படுத்துநர், சமூகப் பணியாளர், செவிலியர், பாதுகாவலர், மருத்துவமனை பணியாளர், துப்புரவு பணியாளர் என ஆறு மனநல மருத்துவப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு, தரமான சிகிச்சை வழங்கப்படும்.
அனைத்து மையங்களிலும் ஒரே வகையில் சிறப்பான சேவைகளை வழங்குவதற்காக ‘நிலையான செயல் நடைமுறைகள்’ வரையறுக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி சேவைகள், பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்படும். இம்மையங்களில் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாட்டோடு போதை மீட்பிற்கான தொடர் சிகிச்சை எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு. அருண் தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு. ஜெ. சங்குமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.