பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: அமைச்சர் சக்கரபாணி!

எரிபொருளை சேமிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என உணவு துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்தார்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகத்தின் சார்பில், எரிபொருள் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘சக்ஷம் 2025’ நிறைவு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர், விழாவில் அவர் பேசியதாவது:-

எரிபொருளை சேமிக்கும் வகையில், பொதுமக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர உதவுகிறது. தமிழகம் முழுவதும் வனப் பகுதிகளை உருவாக்க மரக்கன்றுகள் நடும் இயக்கம் நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்களும், எண்ணெய் நிறுவனங்களும் அதிகளவில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். எரிபொருள் சிக்கனம் குறித்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள், எரிபொருள் சிக்கனம் குறித்து பிற மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாநில தலைவர் எம்.அண்ணாதுரை தனது வரைவேற்புரையில், ‘‘எண்ணெய் மற்றும் எரிவாயு பாதுகாப்பு என்பது பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் செலவுகள் மற்றும் நன்மைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து, கிடைக்கும் வளங்களை சிறப்பாகவும் திறமையாகவும் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பசுமை எரிசக்தியை ஊக்கப்படுத்தும் வகையில், பயோ காஸ், மின்சார வாகனங்கள் சார்ஜிங் மையங்கள், சிஎன்ஜி மற்றும் எல்என்ஜி நிலையங்களை எண்ணெய் நிறுவனங்கள் அமைத்து வருகின்றன’’ என்றார்.