சர்ச்சை கருத்து தெரிவித்த மயிலாடுதுறை ஆட்சியர் திடீர் இடமாற்றம்!

சிறுமி பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்ளான விவ​காரம் தொடர்பாக மயிலாடு​துறை ஆட்சியர் மகா​பாரதி தெரி​வித்த கருத்து சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது. இதற்​கிடையே, அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தர​விட்​டுள்​ளது.

மயிலாடு​துறை மாவட்டம் சீர்​காழி அருகே​யுள்ள அரசூர் பகுதி​யில் செயல்​பட்டு வரும் அங்கன்வாடி​யில் பயின்று வரும் மூன்றரை வயது சிறுமி ஒருவர், கடந்த 24-ம் தேதி உணவு இடைவேளை​யின்​போது கை கழுவுவதற்காக வெளியே சென்ற நிலையில், அவரைக் காண​வில்லை. ஆசிரியை மற்றும் உதவி​யாளர் அருகில் உள்ள பகுதி​களில் தேடி​யுள்​ளனர். அப்போது அங்கன்​வாடிக்கு அருகே உள்ள சந்து பகுதியி​லிருந்து சப்தம் வந்ததை கேட்டு சென்று பார்த்த​போது, தலை மற்றும் முகத்​தில் கற்களால் தாக்​கப்​பட்ட நிலை​யில், சிறுமி பலத்த ​காயங்களுடன் உயிருக்​குப் போராடியபடி கிடந்​துள்ளார். தகவலறிந்து வந்த கொள்​ளிடம் போலீ​ஸார் சிறுமியை மீட்டு, சிகிச்​சைக்காக மருத்​துவ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

தற்போது அந்த சிறுமிக்கு புதுச்​சேரி ஜிப்மர் மருத்​துவ​மனையில் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வருகிறது. இது தொடர்பாக சீர்​காழி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் போக்சோ சட்டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அதே பகுதி​யைச் சேர்ந்த 16 வயது சிறுவனை கைது செய்​தனர்.

இந்நிலை​யில், மயிலாடு​துறை​யில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்​பில் போலீஸாருக்காக போக்சோ சட்டம், குழந்தைகள் பாது​காப்பு மற்றும் பராமரிப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி ​முகாம் நேற்று நடைபெற்​றது. இந்த ​முகாமை தொடங்கி​வைத்து மாவட்ட ஆட்சியர் மகா​பாரதி பேசும்போது, குழந்தைகளை எப்படி போலீ​ஸார் அணுக வேண்​டும், பெற்​றோர் எந்த ​மாதிரி சொல்​லிக் கொடுக்க வேண்​டும் என்பது குறித்​துப் பேசினார். அப்போது, சீர்​காழி​யில் நடைபெற்ற சம்பவத்​தைக் குறிப்​பிட்டு “கடந்த வாரம் 3 வயது சிறுமிக்கு நடந்த சம்பவத்​தில்​கூட, அந்த குழந்​தையே தவறாக நடந்து கொண்​டுள்​ளது. அதை நீங்கள் கவனித்​துப் பார்த்​தீர்கள் என்றால் தெரி​யும். எனக்கு கிடைத்த அறிக்கை​யின்​படி, காலை​யில் அந்தப் பையனின் முகத்​தில் அந்தக் குழந்தை துப்​பி​யுள்​ளது. அது ஒரு காரணம். அதனால் இரு பக்க​மும் பார்க்க வேண்டிய கட்டா​யத்​தில் நாம் உள்ளோம். எனவே வருமுன் காத்தல் என்ற வகையில் பெற்றோர், அங்கன்​வாடிப் பணியாளர்கள் உள்ளிட்​டோருக்கு ஒரு உணர்​திறனை நாம் ஏற்படுத்த வேண்​டும்” என்று பேசினார்.

மாவட்ட ஆட்சி​யரின் இந்தப் பேச்சு ஊடகங்​களி​லும், சமூக வலைதளங்​களி​லும் வெகுவாக பரவிய நிலை​யில், பல்வேறு அரசியல் கட்சி​யினர், சமூக அமைப்பு​களைச் சேர்ந்​தோர் கடும் கண்டனங்களை தெரி​வித்​தனர்.
மேலும், மாவட்ட ஆட்சியரை கண்டித்து மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்​பில் இன்று (மார்ச் 1) ஆட்சியர் அலுவல​கத்தை முற்றுகை​யிடும் போராட்டம் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டு இருந்​தது.

இந்நிலை​யில், மயிலாடு​துறை ஆட்சியர் மகா​பார​தியை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் நா.முரு​கானந்தம் உத்தர​விட்​டுள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறி​விப்​பில்​, “மயி​லாடு​துறை ​மாவட்ட ஆட்​சி​யராக இருந்த ஏ.பி.ம​கா​பார​திக்​குப் ப​திலாக, ஈரோடு மாநக​ராட்சி ஆணை​யர் எச்​.எஸ்​.​காந்த் நியமிக்​கப்​படு​கிறார்” எனத் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.