‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’: பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் முழக்கம்!

72-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் ”அண்ணா வழியில் அயராது உழைப்போம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என்று முழங்கினார்.

இன்று காலை முதல்வர் ஸ்டாலின் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கிவைத்தார். குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்றார். அங்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது. அவர் ”அண்ணா வழியில் அயராது உழைப்போம். இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.” என்று முழங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தொண்டர்கள் அதனை வழிமொழிந்து கோஷம் எழுப்பினர்.

தனது பிறந்தநாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தாயார் தயாளு அம்மாவை சந்தித்து ஆசி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.