இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்யக் கோரி கொட்டும் மழையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் ராமேஸ்வரம் மீனவர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் இலங்கை கட்டுப்பாட்டில் இருக்கும் படகுகளை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் அனுப்புகிறார். ஆனாலும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. இலங்கை கடற்படையால் கடந்த வாரம் மட்டும் 42 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்; மேலும் அவர்களின் 8 மீன்பிடி படகுகளும் இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரம், தங்கச்சி மடத்தில் கொட்டும் மழையிலும் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பத்தினர் குழந்தைகளுடன் பங்கேற்றனர்; இரவும் பகலுமாக ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தங்கச்சிமடம் போராட்ட திடலிலேயே கஞ்சியை தொட்டி திறந்து உணவு வழங்கியும் மீனவர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீரென தங்கச்சிமடத்தில் போராடும் மீனவர்களை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மீனவர்களின் கோரிக்கைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டார். மேலும் மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவையும் ஆளுநர் ரவி பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்திருந்தார். அப்போது, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காப்பகம் அமைக்க நிதி உதவி தர வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமது சொந்த நிதியில் ரூ.50 லட்சத்தை வழங்கினார். இன்று அந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான காப்பகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அத்துடன் ராமநாதபுரம் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் தரணி முருகன் இல்ல திருமண விழாவிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.