தமிழகத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது: மு.க.ஸ்டாலின்!

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழக அரசின் சார்பில் நாளை (மார்ச் 5) நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ள கட்சிகள், கவுரவம் பார்க்காமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.82.99 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டியும், ரூ.139.92 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், 38,956 பயனாளிகளுக்கு ரூ.200.27 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியில் 450 ஏக்கரில் ரூ.250 கோடி செலவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும். விழுந்தமாவடி, காமேஸ்வரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ரூ.12 கோடி மதிப்பில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும். பழமைவாய்ந்த நாகை நகராட்சி கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களில் வடிகால்கள் வாய்க்காலின் மதகுகள் ரூ.32 கோடி சீரமைக்கப்படும். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு சென்னையில் ரூ.55 கோடியில் ஹஜ் புனித இல்லம் கட்டப்படும்.

பிரதமராக மோடி பதவியேற்றது முதல் இதுவரை இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3,656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது 616 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 734 முறை மீனவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. 2016-ம் ஆண்டு இந்திய – இலங்கை அமைச்சர்கள் கூட்டு பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் பிரதமர் பேச வேண்டும். கச்சத் தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க புதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை சரி செய்ய மத்திய அரசு நிதி தரவில்லை. பள்ளி மாணவர்களுக்கும் நிதி தரவில்லை. தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறி இருப்பதற்கு காரணம் இருமொழி கொள்கைதான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழகத்தின் வளர்ச்சி மத்திய அரசின் கண்களை உறுத்துகிறது. ஆங்கிலம் கற்றுக் கொண்டதால்தான் உலகத்தில் உள்ள பெரிய நிறுவனங்களில் தமிழர்கள் உயர் பதவிகளுக்கு வர முடிகிறது.

தொகுதி மறுசீரமைப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக மார்ச் 5-ம் தேதி (நாளை) அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. பெரும்பான்மையான கட்சிகள் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளன. தனிப்பட்ட திமுகவுக்கான பிரச்சினைக்காக இந்தக் கூட்டம் கூட்டப்படவில்லை. எனவே, இந்தக் கட்சிகள் அரசியல் கருத்து வேறுபாடுகளை ஓரமாக வைத்துவிட்டு, தங்களது முடிவை மறுபரிசீலனை செய்து, கவுரவம் பார்க்காமல் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே,பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தாட்கோ தலைவர் மதிவாணன், மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நாகை எம்.பி செல்வராஜ், நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், எம்எல்ஏ முகம்மது ஷாநவாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.