சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகை புறக்கணிப்பு இல்லை: அதிகாரிகள் மறுப்பு!

சென்னை விமான நிலையத்தில் தமிழ் பத்திரிகைகள், இதழ்கள் உள்ளன என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டுக்கு விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் தனது எக்ஸ் வலைதளப்பதிவில், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் ஓய்வறையில், மாநில மொழியான தமிழ் புறக்கணிக்கப்பட்டு, இந்தியை திணிக்கும் விதத்தில் இந்தி மொழி இதழ்கள் வைக்கப்பட்டுள்ளன. இது கண்டிக்கத்தக்கது. தமிழ் மொழியை இந்திய விமான நிலைய ஆணையம் புறக்கணிப்பது சரியானது இல்லை என்று குற்றம் சாட்டி இந்தி இதழ்கள் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து, சென்னை விமான நிலைய அதிகாரிகள் எக்ஸ் வலைதளப்பதிவில், விமான நிலைய பயணிகள் ஓய்வறைகளில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி பத்திரிகைகள், வார இதழ்கள் போன்றவைகளை வைத்திருக்கிறோம். நீங்கள் வந்து பார்க்கும்போது, தமிழ் உள்ளிட்ட மற்ற மொழி பத்திரிகைகள், வார இதழ்களை பயணிகள், விமானத்துக்குள் படிப்பதற்காக கையில் எடுத்து சென்றிருக்கலாம். நீங்கள் பார்க்கும்போது இந்தி மொழி இதழ்கள் மட்டுமே இருந்துள்ளதால், நீங்கள் இந்த பதிவை போட்டு இருக்கலாம். நாங்கள் அனைத்து மொழிகளையும் ஒன்றாகவே பார்க்கிறோம். தனிப்பட்ட விதத்தில் எந்த மொழிக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது என்று தெரிவித்து தமிழ், ஆங்கில பத்திரிகைகள், இதழ்கள் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.