ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதித்த லக்னோ நீதிமன்றம்!

லக்னோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு பேசிய போது சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராகததால் ராகுல் காந்திக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையாக நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, சாவர்க்கரைப் பற்றி தரக்குறைவான கருத்துகளை தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராகுல் காந்தியின் கருத்துகள் சாவர்க்கரை அவதூறு செய்ய நன்கு திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதி என்றும், அந்தக் கருத்துகள் ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பப்பட்டன என்றும் மனுவில் வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டபடி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், வெளிநாட்டுப் பிரமுகர் ஒருவருடன் சந்திப்பு நடத்துவதால், நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாது என்றும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் ராகுல் காந்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆஜராவதில் விலக்கு கோரிய ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ராகுல்காந்தி நேரில் ஆஜராகாததால் ரூ.200 அபராதம் விதித்தது. மேலும் விசாரணையை ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதேபோன்ற ஒரு வழக்கில், இந்த ஆண்டு பிப்ரவரியில் புனே நீதிமன்றம், சாவர்க்கர் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆஜராவதிலிருந்து நிரந்தர விலக்கு அளித்தது. ராகுல் காந்தியின் உயர்மட்ட பாதுகாப்பு மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றை விலக்குக்கான காரணங்களாக நீதிமன்றம் குறிப்பிட்டது.