ஒமைக்ரான் பிஏ வகை கொரோனா வைரஸ் இந்தியாவிலேயே தோன்றி உள்ளதாகவும், 10 மாநிலங்களில் அது பரவி உள்ளதாகவும் இஸ்ரேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
என்னதான் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டிருந்தாலும், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசி செலுத்திய பிறகும், இந்தியாவில் கொரோனா எப்படி மீண்டும் பரவ தொடங்கியுள்ளது என்பது குறித்து இஸ்ரேல் விஞ்ஞானிகள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கொரோனா வைரசின் புதிய வடிவமான பிஏ 2.75 இந்தியாவில் பரவி இருப்பதை தாங்கள் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த வகை வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வரவில்லை என்றும், இந்தியாவில் தான் இது உருவாகி இருப்பதாகவும் அந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பிஏ 2.75 வகை வைரஸ் பரவி உள்ளகாக மற்றொரு அதிர்ச்சி தகவலை அவர்கள் கூறியுள்ளனர்.
பிஏ 2.75 வகை வைரஸ் இந்தியாவில் தான் உருவாகியுள்ளது என்ற இஸ்ரேல் விஞ்ஞானிகளின் கருத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) திட்டவட்டமாக மறுத்துள்ளது. “கொரோனா வைரஸ் உருமாற்றம் என்பது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது. தொடர்ந்து இந்த பிறழ்வு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதற்காக இந்தியாவில்தான் இந்த மாற்றம் நிகழ்ந்தது என கூறப்படுவதை ஏற்று கொள்ள இயலாது” என்று ஐசிஎம்ஆர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.