குளிர்கால சுற்றுலாவுக்கு உத்தராகண்ட் வாருங்கள்: பிரதமர் மோடி அழைப்பு!

குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம் உத்தராகண்ட் என தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கார்ப்பரேட் துறையினர், திரைப்படத்துறையினர், இளைஞர்கள் உள்ளிட்டோர் இங்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் எனக் கூறினார்.

உத்தராகண்டில் உள்ள உத்தரகாசிக்கு ஒரு நாள் பயணமாக வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹர்சிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

மனாவில் சமீபத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கங்கை தாயின் குளிர்கால தங்குமிடமான முக்வாவில் எனது சொந்த மக்களோடு இருப்பதை பாக்கியமாகக் கருதுகிறேன். கங்கை அன்னையின் அருளால்தான் பல ஆண்டுகளாக உத்தராகண்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரது ஆசிர்வாதம் தான் நாடாளுமன்ற உறுப்பினராக என்னை காசிக்கு இட்டுச் சென்றது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆழமான உணர்வை நான் உணர்ந்தேன். கங்கை அன்னை தனது சொந்தக் குழந்தையைப் போல என்னை அரவணைத்துக் கொண்டார். அவரது பாசம்தான் இன்று என்னை இங்கு அழைத்து வந்தது.

உத்தராகண்ட் குளிர்கால சுற்றுலாவுக்கு ஏற்ற இடம். மாநிலத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி எடுத்து வரும் முன்முயற்சிகள் பாராட்டுக்குரியவை. உத்தராகண்டில் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதை உறுதிசெய்ய வேண்டியது மிகவும் அவசியம். தற்போது, ​​பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் உத்தராகண்டுக்கு வருகை தருகிறார்கள். இதனால் குளிர்காலத்தில் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் மற்றும் தங்குமிடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இது மாநிலத்தின் பொருளாதாரத்தை பலவீனப்படுத்துகிறது.

உண்மை என்னவென்றால், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் குளிர்காலத்தில் உத்தராகண்டுக்குச் சென்றால், அவர்கள் இந்த தேவபூமியின் தெய்வீக ஒளியை அதன் உண்மையான அர்த்தத்தில் காண முடியும். மலையேற்றம், பனிச்சறுக்கு போன்ற சாகச நடவடிக்கைகளையும் அவர்கள் மகிழ்ச்சிகரமானதாகக் காண்பார்கள். உத்தரகண்டில் குளிர்காலம் மத ரீதியாகவும் சிறப்பு வாய்ந்தது. குளிர்காலத்தில் பல்வேறு புனித யாத்திரைத் தலங்களில் பல புனித சடங்குகள் நடைபெறுகின்றன. முக்வா கிராமத்தில் செய்யப்படும் பிரமாண்டமான சடங்குகள் பண்டைய மரபுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எனவே, ஆண்டு முழுவதும் சுற்றுலாவை உருவாக்குவது குறித்த மாநில அரசின் தொலைநோக்குப் பார்வை, சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தெய்வீக அனுபவத்தை வழங்கும். அதோடு, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

இரட்டை என்ஜின் கொண்ட மாநிலம் என்பதால், உத்தராகண்ட் ஒரு வளர்ந்த மாநிலமாக மாறுவதை நோக்கி நகர்கிறது. எல்லா காலங்களுக்கும் ஏற்ற சார் தாம் சாலைகள், நவீன விரைவுச் சாலைகள், ரயில்வே மற்றும் விரிவாக்கப்பட்ட ஹெலிகாப்டர் சேவைகள் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் வடிவம் பெற்று வருகின்றன. சமீபத்தில், கேதார்நாத் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் இடையே ரோப் வழிகளை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அங்கீகரித்தது. இது பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும். கேதார்நாத் ரோப்வே 8-9 மணிநேர பயணத்தை வெறும் 30 நிமிடங்களாகக் குறைக்கும். முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் யாத்திரை மேற்கொள்வதை இது எளிதாக்கும்.

நாடு முழுவதிலும் இருந்து மக்கள் குறிப்பாக இளைஞர்கள் குளிர்காலத்தில் உத்தராகண்டுக்கு வருகை தருமாறு அழைக்கிறேன். மாநிலத்தின் பெரும்பகுதி மூடுபனியால் சூழப்பட்டிருக்கும் போது, ​​சூரிய ஒளியில் மலைகள் பிரகாசிப்பதை பார்க்க முடியும். இது ‘சூரிய குளியல் சுற்றுலா’ என்று அழைக்கப்படுகிறது.

யோகா மற்றும் ஆயுர்வேதம் மூலம் புத்துயிர் பெறக்கூடிய தெய்வீக பூமியான உத்தராகண்டில் நிறுவனங்கள் தங்கள் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்த முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உத்தராகண்டுக்கு குளிர்கால பயணங்களைத் திட்டமிடவும் அழைப்பு விடுக்கிறேன்.

இந்தியாவில் திருமணங்கள் இன்று பல பில்லியன் டாலர் மதிப்புள்ள துறையாக மாறி உள்ளது. உத்தராகண்ட், குளிர்கால திருமணங்களுக்கு ஒரு முக்கிய இடமாக இருக்க முடியும். இதேபோல், திரைப்படங்களுக்கு நண்பன் மாநிலமாக உத்தராகண்ட் திகழ்வதால், திரைப்படத் துறையினர் மாநிலத்தின் அற்புதமான நிலப்பரப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

உலகின் பல இடங்கள் குளிர்கால சுற்றுலாவுக்காக அறியப்படுகின்றன. அவற்றின் வெற்றியில் இருந்து உத்தராகண்ட் பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். உதாரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள வெந்நீர் ஊற்றுகளை ஆரோக்கிய ஸ்பாக்களாக உருவாக்கலாம். உத்தராகண்டில் ஆன்மீக மற்றும் யோகா அமைப்புகள் சிறப்பு குளிர்கால ஓய்வு முகாம்களை நடத்தலாம். உத்தராகண்டின் குளிர்கால சுற்றுலா குறித்த விழிப்புணர்வைப் பரப்ப, உள்ளடக்க படைப்பாளர்களை பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இதை விளம்பரப்படுத்த தேசிய அளவிலான போட்டிகளையும் நடத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.