அமித் ஷா ராணிப்பேட்டை வருகை: 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி ராணிப்பேட்டையில் இன்றும்(மார்ச். 6) நாளையும்(மார்ச். 7) ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கபட்டுள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆவதையொட்டி, மாா்ச் 7-ஆம் தேதி சிஐஎஸ்எஃப் உதய தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் மண்டல பயிற்சி மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று கடற்கரை சைக்கிள் பேரணியை தொடக்கி வைக்கிறார்.

குஜராத் மாநிலம், லக்பத் கோட்டை மற்றும் மேற்குவங்க மாநிலம் பக்காளி கடற்கரையிலிருந்து இரு பிரிவுகளாக இந்த சைக்கிள் பேரணி தொடங்குகிறது. ‘பாதுகாப்பான கடல் வளம், செழிப்பான இந்தியா’ என்ற கருப்பொருளுடன் நடத்தப்படும் இப்பேரணியில், 14 பெண் வீரா்கள் உள்பட 125 வீரா்கள் பங்கேற்கின்றனா். 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 6,553 கிலோமீட்டா் தூரத்தை 25 நாள்களில் கடந்து, மாா்ச் 31-ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா் நினைவிடத்தில் வந்து பேரணியை நிறைவுசெய்ய உள்ளனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையையொட்டி ராணிப்பேட்டையில் மார்ச் 6, 7 ஆகிய தேதிகளில் ட்ரோகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.