“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான பிரச்சினைகளை திசை திருப்பவே தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்” என பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி குற்றம்சாட்டினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நாமக்கல் காந்தி சிலை அருகில் மும்மொழி கல்விக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் தொடக்க விழா நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட தலைவர் சரவனண் தலைமை வகித்தார். நகர பாஜ தலைவர் தினேஷ் முன்னிலை வகித்தார். பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கையெழுத்து இயக்கம் மற்றும் கல்விக் கொள்கை பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
தேசிய அளவில் மிகச் சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வித் திட்டம் தேவை என வலியுறுத்துப்பட்டுள்ளது. இதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழகத்தில் இந்த திட்டத்தை ஏற்க மாட்டோம் என முதல்வர் கூறி வருகிறார்.
ஏற்கெனவே தமிழகத்தில் அரசு பள்ளிகளைவிட தனியார் பள்ளிகளில் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிப் பாடங்கள் உள்ளன. பல மாணவர்கள் இந்த மொழிப் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கின்றனர். இந்த வாய்ப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லை. இதைத்தான் மத்திய அரசு 3-வது மொழியை அனைத்து அரசு பள்ளிகளிலும் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகிறது.
இந்தி மொழியை தேர்வு செய்ய வேண்டும் என மத்திய அரசோ, மத்தியக் கல்வித் துறையோ வற்புறுத்தவில்லை. ஆனால், தமிழக முதல்வர் இந்தியை எதிர்ப்போம் என கூறி பிரச்சினையை திசை திருப்பி வருகிறார். தமிழகத்தில் 3-வது மொழி கண்டிப்பாகத் தேவை. நாம்தான் படிக்கவில்லை, நமது குழந்தைகள் கட்டாயம் படிக்க வேண்டும் என்பதில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். தமிழக அரசின் பொய்ப் பிரச்சாரம் இனி இந்த பிரச்சினையில் எடுபடாது.
மக்களவை தொகுதி மறுவரையறை நடைபெற்றால் எந்த மாநிலத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதுவரை மத்திய தேர்தல் ஆணையம் தொகுதி மறுசீரமைப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்தநிலையில், தென்மாநில அளவில் தொகுதி மறுசீரமைப்பு 30 ஆண்டுகள் செய்யக் கூடாது என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மத்திய தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. இதுவரை தேர்தல் ஆணையம், தொகுதி மறுசீரமைப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில், தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுவதன் நோக்கம், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான பிரச்சினைகளை திசை திருப்புவதற்காகத்தான்.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்தது. கல்விக் கடன் தள்ளுபடி, அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை, விவசாய விளைபொருட்களுக்கு கூடுதலான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் போன்ற வாக்குறுதிகளை 4 ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சினையை திசை திருப்பவே தமிழக முதல்வர் மக்களவைத் தொகுதி சீரமைப்பு குறித்து பேசி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.