லண்டனின் சவுதம் ஹவுஸில் இருந்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியேறும் போது, காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் அவரின் வாகனத்தை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த பாதுகாப்பு அத்துமீறலை சுட்டிக்காட்டி ‘ஜனநாயக சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதாக’ இந்தியா சாடியுள்ளது
இங்கிலாந்துடன் பேச்சுவார்த்தை நடத்த லண்டன் சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது பயணத்தில் பிரிட்டன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று புதன்கிழமை இரவு சவுதம் ஹவுஸில் திங்க் டேங்க் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்று, “உலகில் இந்தியாவின் எழுச்சியும் பங்களிப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த அரங்குக்கு வெளியே கூடி ஆர்ப்பாட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள், கைகளில் காலிஸ்தான் கொடிகளை ஏந்தியும், ஒலிப்பெருக்கிகளை வைத்து கோஷமிட்டபடியும் இருந்தனர். இதுகுறித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொலி ஒன்றில், காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், ஜெய்சங்கரின் காரின் முன்பு நின்று இந்தியாவின் மூவர்ணக் கொடியைப் கிழிப்பது தெரிகிறது.
இதுகுறித்து வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, “வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்ரின் லண்டன் பயணத்தில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்ட வீடியோக்களை நாங்களும் பார்த்தோம். இந்த பிரிவினைவாத மற்றும் தீவிரவாத குழுக்களின் இதுபோன்ற அத்துமீறல்களை கடுமையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற விஷயங்களில் ஜனநாயகத்தின் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதையும் கண்டிக்கிறோம். பேச்சுவார்த்தையை நடத்தும் நாடு அதன் ஜனநாயகக் கடமையை முழுமையாக நிறைவேற்றும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இங்கிலாந்து திரையரங்குகளில் இந்தியாவின் ‘எமர்ஜென்சி’ படம் திரையிடப்பட்ட அரங்குகளில் காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஏற்படும் அழிவுகள் குறித்த கேள்விக்கு, “இந்தியாவுக்கு எதிரான சக்திகளால் உருவாக்கப்படும் வன்முறை போராட்டங்கள், குறுக்கீடு சம்பவங்கள் குறித்து தொடர்ந்து இங்கிலாந்து அரசிடம் நமது கவலைகளைத் தெரிவித்து வருகிறோம். பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை இதுபோன்ற வழிகளில் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்களுக்கு சம்மந்தப்பட்டவர்களைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும்.” என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தனது இங்கிலாந்து பயணத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் லண்டனில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் லேமியின் செவனிங் ஹவுஸில் இருதரப்பு ஆலோசனையில் கலந்து கொண்டார்.