முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் அனைத்தையும் கூட்டணிக்கு வரவேற்கிறோம் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
பாளையங்கோட்டையில் அதிமுக திண்ணைப் பிரச்சாரத்தை நேற்று தொடங்கிவைத்த ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
திமுக ஆட்சியின் அவலங்களை மடைமாற்றும் முயற்சியாக, தினமும் பல்வேறு விழாக்களை தமிழக அரசு நடத்துகிறது. டாஸ்மாக்கில் அதிக அளவில் ஊழல் நடைபெறுகிறது. அரசு கஜானாவுக்கு செல்ல வேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை முதல்வர் குடும்பத்துக்கு கிடைக்க வழிவகை செய்துள்ளதால்தான் செந்தில் பாலாஜியை தியாகி என்கின்றனர். அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வீடியோ தொடர்பான உண்மையை முதல்வர் வெளிப்படுத்த வேண்டும். அமைச்சர் தவறான தகவலை வெளியிட்டிருந்தால், அவர் மீது வழக்கு தொடர்வார்களா?
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். திமுக மட்டுமே எங்களுக்கு ஒரே எதிரக் கட்சி. திமுகவுக்கு எதிராக உள்ள அனைவரும் எங்களுக்கு நண்பர்களே. பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் அனைத்தையும் கூட்டணிக்கு வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.