மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திருமாவளவன் மனு!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திருமாவளவன் மனு அளித்தார். வருவாய் வரி நிதிப்பகிர்வைக் குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மத்திய மந்திரியிடம் கோரியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் வலைதளத்தில், “நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து ‘மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வை 40 சதவீதம் ஆகக் குறைக்கக்கூடாது’ என்பதோடு 16-வது நிதிக்குழு கவனத்தில் கொள்ள வேண்டிய வேறு சில அம்சங்களையும் குறிப்பிட்டு மனு அளித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு பதிவில், “நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களைச் சந்தித்து மாநிலங்களுக்கான வருவாய் வரி நிதிப்பகிர்வைக் குறைக்கும் முடிவை கைவிட வேண்டுமென கோரினோம். அத்துடன், மேல்நிலை மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் 2026 இல் முடிவடைய உள்ளதால், அதனை நீட்டிக்க வேண்டும் எனவும், பட்டியல் சமூகம்- பட்டியல் பழங்குடியினர் அந்த கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான வருமான வரம்பை ரூ. 2.50 லட்சம் என்பதையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவச் செல்வங்களுக்கான வருமான வரம்பை 2.00 லட்சம் என்பதையும்; தலா எட்டு லட்சமாக உயர்ந்த வேண்டும் எனவும் மத்திய மந்திரியிடம் வலியுறுத்தி உள்ளோம். இச்சந்திப்பு் நம்பிக்கையளிப்பதாக அமைந்தது” என்று அதில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.