நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் பணியாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் தெரிவிக்க, சென்னை வளசரவாக்கம் போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு சென்றனர். அப்போது சீமான் வீட்டில் இல்லாததால், வீட்டின் முன்பு கேட்டில் பிப்ரவரி 28-ல் ஆஜராக வேண்டும் என சம்மனை போலீசார் ஒட்டிச் சென்றனர். போலீசாரால் ஒட்டப்பட்ட சம்மனை சீமான் வீட்டு பணியாளர் சுபாகர் என்பவர் கிழித்தெறிந்தார். இதுதொடர்பாக விசாரணை நடந்த நீலாங்கரை போலீசார் சீமான் வீட்டிற்கு சென்றனர். அப்போது போலீசாரை வீட்டின் உள்ளே அனுமதிப்பதில் பாதுகாவலர் அமல்ராஜுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாவலர் அமல்ராஜ், பணியாளர் சுபாகர் ஆகியோரை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபாகர், அமல்ராஜ் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் அரசியல் உள்நோக்கில் தாங்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும், காவல்துறை கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் தவறானது. துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதால், ஆயுத தடுப்பு சட்ட பிரிவில் கைது செய்ய முடியாது எனத் தெரிவித்தனர். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருள் செல்வம், சம்மனை கிழித்தது தொடர்பாக காவல் ஆய்வாளரை அவர்கள் தாக்கியதாக கூறினார். பாதுகாவலர் வைத்திருந்த துப்பாக்கி ஒருவேளை வெடித்திருந்தால் துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டிருக்கும் எனக் கூறினார். சொந்த பாதுகாப்புக்காக துப்பாக்கியே தவிர, அடுத்தவர்களை மிரட்ட துப்பாக்கி வைத்திருக்க அனுமதியில்லை எனவும் தெரிவித்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜாமீனில் வெளியில் வரக்கூடிய பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இருவர் மீதும் வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து, துப்பாக்கி உரிமையை மீறியிருந்தால் அதனை ரத்து செய்வது தொடர்பாக அரசு முடிவு எடுக்கலாம் என எனக் கூறிய நீதிபதி, இருவரையும் இதற்கு மேல் சிறையில் வைக்க தேவையில்லை எனக் கூறி இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், மறு உத்தரவு வரும் வரை, அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவரும் தினமும் காலை 10.30 மணிக்கு பூக்கடை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்தார்.