நாகரீகம் பற்றி நீங்க பேசினா நாக்கை அறுப்பான் தமிழன்: துரைமுருகன்!

ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்கிற நாற்றம்பிடித்த நாகரீகம் கொண்டவர்கள் வட இந்தியர்கள்; இப்படியான நாகரீகம் கொண்ட வட இந்தியர்கள், தமிழரின் நாகரீகம் பற்றி பேசினால் தமிழன் நாக்கை அறுத்துவிடுவான் எச்சரிக்கை என திமுக பொதுச்செயலாளரும் தமிழக மூத்த அமைச்சருமான துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிரான திமுக கண்டனக் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

1965-ம் ஆண்டு இந்தி திணிப்பு போராட்டத்தின் போது பேரணாம்பேட்டில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் ஆரணியைச் சேர்ந்த 12 வயது சிறுமி மரணம் அடைந்தார். தமிழ்நாட்டு மக்களை காட்டுமிராண்டிகள் என மத்திய அமைச்சர் பேசுகிறார்; மத்திய அமைச்சருக்கு நாவடக்கம் தேவை.

வட இந்தியாவின் சட்டமே ஒரு பெண்ணை 5 ஆண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதுதான். நாங்கள் எல்லாம் ஒருவன், ஒருத்தி என்ற பண்பாட்டுடன் வாழ்கிறவர்கள். வட இந்தியாவிலோ 5 பேர் அல்லது 10 பேர் சேர்ந்து ஒருத்தியை திருமணம் செய்து கொள்கின்றனர்; இதுதான் நாகரீகமாம். ஒருத்தன் போய்விட்டால் அடுத்தவன் வருவான். இதுதான் வட இந்திய சட்டம். இப்படி நாற்றமெடுத்த நாகரீகத்தைக் கொண்டவனாடா எங்களைப் பார்த்து நாகரீகம் இல்லாதவன் என சொல்கிறாய்? நாக்கை அறுத்துப் போடுவான் தமிழன் ஜாக்கிரதை! அதனால்தான் முதல்வர் ஸ்டாலின் சொன்னார், மத்திய அமைச்சரே! உங்களுக்கு நாவடக்கம் தேவை என்றார். அவர் யார் மகன்? கருணாநிதியின் மகன். அஞ்சாத நெஞ்சம் கொண்டவர்.

குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக பின்பற்றி மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்தது தமிழ்நாடு. ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்கிறது மத்திய அரசு. மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்வது இல்லை; பேரிடர் நிதியும் தரவில்லை. கையில் இருக்கிற நிதியை வைத்துக் கொண்டுதான் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.