மருத்துவ படிப்பில் வசிப்பிட இட ஒதுக்கீடு தீர்ப்பை கண்டித்து மார்ச் 16-ல் ஆர்ப்பாட்டம்!

முதுநிலை மருத்துவப் படிப்புகளில், வசிப்பிட அடிப்படையில் மாநில அரசுகளுக்கென தனியாக இடங்களை ஒதுக்கீடு செய்துகொள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து மார்ச் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் எம்.அஜய் முகர்ஜி ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எம்பிபிஎஸ் தவிர முதுநிலை மற்றும் மருத்துவ மேற்படிப்புகளில் மாநில அரசுகள் தங்களுக்கென வசிப்பிட அடிப்படையில் இடங்களை வைத்துக் கொள்ளக் கூடாது. அனைத்து முதுநிலை மருத்துவ இடங்களையும், மேற்படிப்பு இடங்களையும் அகில இந்திய அளவில் அனைவருக்கும் பொதுவானதாக்க வேண்டும் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சி கோட்பாட்டுக்கும், வகுப்புவாரி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கும், அரசு மருத்துவர்களின் இட ஒதுக்கீட்டுக்கும், பெண்களின் உரிமைகளுக்கும் எதிரானதாகும்.

எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்தும், மாநில உரிமைகளை மருத்துவக் கல்வியில் பாதுகாக்க உரிய அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் மார்ச் 16-ம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.