தமிழ்நாட்டிற்கு மும்மொழிக்கொள்கையோ, இருமொழிகொள்கையோ தேவை இல்லை ஒரு மொழிக் கொள்கைதான் வேண்டும், தாய்மொழி தமிழ் மொழி கல்வி தான் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுக கடந்தாண்டு பள்ளி கல்வித் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பிஎம் ஸ்ரீ திட்டத்தை நாங்கள் கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்கின்றோம். எங்களுக்கு நிறைய ஒதுக்குங்கள் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் டெல்லியிலே கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். அதை மூடி மறைத்து இப்பொழுது இரு மொழி கொள்கை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இது மிகப்பெரிய நாடகமாக நான் பார்க்கிறேன்.
பாமகவை பொறுத்தவரையில் எங்களுடைய கொள்கை ஒரு மொழிக் கொள்கை தான். அது தமிழ் மொழிக் கொள்கை. உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கை தான் இருக்கிறது. இந்தி மொழி மட்டும் தான் இருக்கிறது. அங்கு இரு மொழி கொள்கை கூட கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நாங்கள் நிதி தருவோம் என்று சொல்கிறார்கள். அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. இன்று தமிழகம் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. கல்வி, தொழில் துறை, மருத்துவம் உள்ளிட்டவற்றில் முன்னேறியுள்ளது. அப்படி இருக்கும்போது எதற்காக நாங்கள் இந்த மும்மொழி கொள்கையை ஏற்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
ஒரு கொள்கையை மத்திய அரசு திணிக்க கூடாது. திணிக்கவும் முடியாது.. தமிழக அரசு இரு மொழிக் கொள்கையை கேட்கிறது. அதை கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் எவ்வளவு முக்கிய பிரச்சினைகள் இருக்கும் போது கடந்த 10 நாட்களாக இந்த பிரச்சனை தான் தமிழ்நாட்டில ஓடிக் கொண்டிருக்கிறது. திமுகவும் பிஜேபியும் பேசி வைத்துக் கொண்டு செயல்படுவது போல உள்ளது. டாஸ்மாக் துறையில் ஆயிரம் கோடி ஊழல் என அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு அரிசியில் 900 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று உள்ளது. பெண்கள் தமிழகத்தில் நிம்மதியாக நடமாட முடியாத சூழல் உள்ளது. இப்படி எத்தனையோ பல பிரச்சினைகள் தமிழ்நாட்டில் உள்ளது.
தமிழக அரசு கடந்தாண்டு நான்கரை லட்சம் கோடியில் பட்ஜெட் போட்டு உள்ளது. அதில் வெறும் 2000 கோடியை தான் மத்திய அரசு தர மறுக்கிறது. அதை தமிழக அரசே கொடுத்து விட்டு கூட உங்கள் கொள்கையை நாங்கள் ஏற்க மாட்டோம் என சொல்லிவிட்டு போகலாம். ஆனால் இன்னும் பத்து மாதத்தில் தேர்தல் இருப்பதால் திமுக அரசு அதனை வைத்து அரசியல் செய்து வருகிறது. தற்போதுள்ள இரு மொழிக் கொள்கையை படித்து தான் தமிழர்கள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.