தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்!

சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என்றும், மார்ச் 24 முதல் ஏப்.30-ம் தேதி வரை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.

தமிழக அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய, பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

சட்டப்பேரவையில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து, பேரவையில் வேளாண் பட்ஜெட்டை நாளை (இன்று) அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார். மார்ச் 17 முதல் 5 நாட்கள் பட்ஜெட்கள் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும்.

மார்ச் 24 முதல் ஏப் 30-ம் தேதி வரை 24 நாட்கள் துறைகள் வாரியான மானிய கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும். மார்ச் 15 தவிர மீதமுள்ள அனைத்து நாட்களும் கேள்வி நேரம் இடம் பெறும். காலை வேளைகளில் மட்டுமே பேரவைக் கூட்டம் நடைபெறும், மாலை நேரத்தில் இல்லை.

ஓ.பன்னீர்செல்வம் தனக்கு முன் வரிசையில் இடம் அல்லது அவர் தரப்பினர் சேர்ந்து அமரும் வகையில் இடம் வேண்டும் என்று கேட்டிருந்தார். தற்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்களில் அமர்ந்திருக்கின்றனர். அவர் முதல்வராக இருந்தவர். வழங்கப்பட்ட இடத்தை ஏற்றுக் கொண்டுள்ளார்.

பேரவையில் அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை என்றும் பேரவையில் பேசுவதை ஒளிபரப்பு செய்யவில்லை என்றும் சட்டப்பேரவைத் தலைவர் மீது அதிமுக தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பி்ன்னரே பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கேள்வி நேரம், முதல்வர், அமைச்சர்கள் பதில்கள், அவர்கள் நடவடிக்கைகளும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. யார் பேசுவதையும் காட்டக்கூடாது என்ற குறுகிய எண்ணத்துடன் அரசு செயல்படவில்லை. நானும் அவ்வாறு செயல்படவில்லை. அதிமுகவினர் அளித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் திங்கட்கிழமை எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.