“இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை வர இருக்கிறார். அப்போது, பல்வேறு இரு தரப்பு ஒப்பந்தங்களை அவர் இறுதி செய்வார்” என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கிழக்கு திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் நகரில் 135 மெகாவாட் சூரிய மின் நிலையத்தை அமைக்க அரசு மின்சார நிறுவனமான இலங்கை மின்சார வாரியமும் இந்தியாவின் என்டிபிசியும் 2023-ஆம் ஆண்டில் ஒப்புக்கொண்டன. தற்போது, மின்நிலையம் திறப்பு விழா காண தயாராக இருக்கிறது.
இந்நிலையில், கொழும்பு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் ஒதுக்கீடு விவாதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத், “நமது அண்டை நாடான இந்தியாவுடன் நாங்கள் நெருங்கிய உறவைப் பேணி வருகிறோம். எங்கள் முதல் தூதகர ரீதியிலான பயணம் இந்தியாவுக்கு இருந்தது. அங்கு இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்து பல ஒப்பந்தங்களை எட்டினோம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இங்கு வருவார். பிரதமர் மோடியின் வருகையின்போது, சம்பூர் சூரிய மின் நிலையத்தைத் திறப்பதுடன் கூடுதலாக பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். இந்தியா மீதான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் நல்லெண்ணக் கொள்கை இலங்கைக்கு பல நன்மைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பல இந்தியத் திட்டங்கள் அடங்கியுள்ளன. தேசிய நலனைப் பேணுவதற்காகப் பணியாற்றும் அதே வேளையில், எந்த சார்பும் எடுக்காமல் எங்கள் வெளியுறவுக் கொள்கையில் நாங்கள் நடுநிலையாக இருப்போம்” என்று கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கைக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும். கடந்த ஆண்டு இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது, எட்டப்பட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.