சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் சைபர் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தி உள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் மற்றும் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கல்லூரி (பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், போரூர்) மாணவ மாணவிகளுடன் இணைந்து, இணையதள குற்றங்கள், ஆன்லைன் வர்த்தக மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைது மோசடிகள், திருமண வரன் மோசடிகள், ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணி பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை அருகில் நேற்று காலை நடைபெற்றது.
தமிழக காவல் துறையின் முன்னாள் டிஜிபி சி.சைலேந்திர பாபு, மாணவ, மாணவிகளின் சைபர் குற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:-
சைபர் குற்றங்கள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். இந்த குற்றங்களுக்கு சாதாரண தண்டனை சரிவராது. அதுக்கு குறைந்தது ஆயுள் தண்டனை இருக்க வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். நமது மக்கள் எளிதாக ஏமாந்து விடுகின்றனர். சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் யாரும் ஏமாற மாட்டார்கள். ஏமாற்றவும் முடியாது.
உலகத்தில் அதிகமாக இந்தியர்கள் ஏமாறுகின்றனர். அதுவும் தமிழகத்தில்தான் அதிகமானோர் ஏமாறுகின்றனர். ஏனென்றால் தமிழக மக்களிடம்தான் அதிக பணம் உள்ளது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை காப்பாற்ற சைபர் க்ரைம் பற்றிய முழு விபரங்களையும் காவல்துறை வெளியிட்டு வருகிறது.
சமீபத்தில் கூட ஒரு அரசு உயர் அதிகாரி ஒட்டுமொத்தமாக சம்பாதித்த ரூ.6 கோடி பணத்தையும் இழந்து ஒரு பைசா கூட இல்லாமல் உள்ளார். அவர் மனநிலை எப்படி இருக்கும். அவரது குடும்பத்தினர் அவரை எப்படி பார்ப்பார்கள். எனவே, ஒரு நிமிடத்தில் ஒட்டு மொத்த பணமும், எல்லாவற்றுக்கும் மேலாக மானமும் போய் விடும். இன்னும் பெரிய அளவிலான சைபர் குற்றங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே, விழிப்புணர்வே ஏமாறுவதை தடுக்கும் திறவுவோல். இவ்வாறு சைலேந்திரபாபு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஏ.ராதிகா, போக்குவரத்து காவல் இணை ஆணையர் (தெற்கு) பண்டி கங்காதர், துணை ஆணையர்கள் எஸ்.ஆரோக்கியம், வி.வி.கீதாஞ்சலி, ஜி.வனிதா, உதவி ஆணையர் காவியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.