தமிழகத்தில் நடைபெறும் 2026 சட்டப்பேரவை தேர்தலில், ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் முக்கியப் பங்காற்றும் என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கிராம கமிட்டி மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொறுப்பாளர்கள், பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். பின்னர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடந்த 2 மாதங்களில் கிராம சீரமைப்பு மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று, அவற்றில் 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை ஒரு மாதத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தமிழ்நாடு காங்கிரஸ் முக்கியப் பங்காற்றும்.
பாஜகவுன் கூட்டணி அமைக்கும் கட்சிகள் காலப்போக்கில் சிதைக்கப்பட்டுள்ளன. இதுதான் பாஜகவின் வரலாறு. இதை மாநிலக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், காங்கிரஸ் அப்படி எந்த கட்சியையும் அழித்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கட்சியின் மூத்த தலைவர்கள் கிருஷ்ணசாமி, சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், அகில இந்திய செயலாளர் சூரஜ் ஹெக்டே, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகரன், மகளிரணித் தலைவி சையத் அசீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழக காங்கிரஸுக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்க வளாகம் உட்பட தமிழகம் முழுவதும் ரூ.2,500 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளன. பெரும்பாலான சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் கட்சி வர வேண்டிய வருவாய் தடைபட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து கணக்குக் குழுக் கூட்டம் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் சொத்துகளை மீட்பதற்கான நடவடிக்கைகள், அதன் மூலம் கட்சி வருவாயை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.