தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம். தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என்று பிரேமலதா கூறியுள்ளார்.
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று பழனிக்கு வந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் என்பதால், அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. எனினும் தே.மு.தி.க. சார்பில், தமிழக அரசின் பட்ஜெட்டை வரவேற்கிறோம். ஏனென்றால், கடந்த 2006-ம் ஆண்டு விஜயகாந்த்தின் முதல் தேர்தல் அறிக்கையில் கொடுத்த பல்வேறு திட்டங்களை தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே தமிழக அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
தமிழகத்தில் தமிழ்மொழி கட்டாயம் ஆக்கப்பட வேண்டும். அன்னை மொழி காப்போம், அனைத்து மொழிகளை கற்போம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நமது 40 நாடாளுமன்ற தொகுதிகளை மாற்றினால், மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசுடன் கைகோர்த்து தமிழகத்துக்காகவும், மக்களுக்காகவும் நாங்கள் போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.