மகா கும்பமேளா புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும்: பிரதமர் மோடி!

“இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவத்தில் முழு உலகமும் கண்டது. மகா கும்பமேளாவில் ஒரு தேசிய விழிப்புணர்வை நாங்கள் கண்டோம். இது புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மகா கும்பமேளா தொடர்பாக உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-

மகா கும்ப மேளாவில் குறைந்தது 66 கோடி பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரான்சின் மக்கள் தொகையை விட இது கிட்டத்தட்ட 10 மடங்கு. மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு வழிவகுத்த நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். மகா கும்பமேளாவின் வெற்றி, எண்ணற்றோரின் பங்களிப்புகளின் விளைவாகும். இந்தியா, உத்தரப் பிரதேசம் மற்றும் பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.

மகா கும்பமேளா வேற்றுமையில் ஒற்றுமை என்ற அனுபவத்தை வழங்கியது. இது நாட்டின் சிறப்பம்சமாகும். மகா கும்பமேளாவில், அனைத்து வேறுபாடுகளும் மறைந்துவிட்டன. இது இந்தியாவின் மிகப்பெரிய பலம். ஒற்றுமையின் உணர்வு நமக்குள் ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது.

மகா கும்பமேளா, மக்களின் உறுதியாலும், அசைக்க முடியாத பக்தியாலும் உந்தப்பட்டு, மக்களால் வழிநடத்தப்பட்டது. இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவத்தில் முழு உலகமும் கண்டது. மகா கும்பமேளாவில் ஒரு தேசிய விழிப்புணர்வை நாங்கள் கண்டோம். இது புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும். இது நமது வலிமையை சந்தேகிப்பவர்களுக்கு ஒரு பொருத்தமான பதிலையும் அளித்துள்ளது.

இந்தியாவின் ஒற்றுமையின் வலிமை, அதைத் தொந்தரவு செய்யும் அனைத்து முயற்சிகளையும் உடைத்துவிடும். மகா கும்பமேளாவுடன் இணைக்கப்பட்ட இந்தியாவின் புதிய தலைமுறை, மரபுகள் மற்றும் நம்பிக்கையை பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறது. பிரயாக்ராஜ் மகா கும்பமேளா எழுச்சி பெறும் இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கிறது.

மகாகும்பமேளா மூலம் முழு உலகமும் இந்தியாவின் மகத்தான வடிவத்தைக் கண்டுள்ளது. சிலரின் மனதில் இருக்கும் சந்தேகங்களை மகா கும்பமேளா நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு அயோத்தியில் நடைபெற்ற பிரதிஷ்டை விழாவின் போது, ​​அடுத்த 1000 ஆண்டுகளுக்கு நாடு எவ்வாறு தயாராகி வருகிறது என்பதற்கான ஒரு பார்வையை நாங்கள் பெற்றோம். மேலும் ஒரு வருடம் கழித்து இந்த மகா கும்பமேளாவின் ஏற்பாடு நம்மையும் தேசத்தின் கனவையும் பலப்படுத்தியுள்ளது.

சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய உரை, பகத்சிங்கின் துணிச்சல் மற்றும் மகாத்மா காந்தியின் நடவடிக்கைக்கான அழைப்பு உள்ளிட்டவை அடங்கிய இந்தியாவின் சுதந்திர இயக்க காலம் என தேச வரலாற்றில் பல தருணங்கள் முக்கியமானவை. இந்த முக்கியமான தருணங்களின் தொகுப்பில் மகா கும்பமேளாவும் சேர்ந்துள்ளது.

மொரிஷியஸுக்கு நான் சென்றபோது பிரயாக்ராஜிலிருந்து புனித நீரை எடுத்துக் கொண்டு சென்றேன். அந்த புனித நீரை வழங்கியபோது ஒரு கொண்டாட்ட சூழல் நிலவியது பலர் தங்கள் கலாச்சாரத்தையும் மரபுகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். இது தன்னம்பிக்கையை ஊக்குவிக்கிறது, நாட்டின் இலக்குகளை அடைய நமக்கு உதவுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.