“கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளோம். உள்ளூர் மக்களால் தினசரி சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது. எனவே, அவர்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்” என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 18) திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேசும்போது, “திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் சமூக நீதிக் கடவுளாகப் பார்க்கப்படுகிறார். அந்த கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இக்கோயிலில் ரோப் கார் வசதி செய்து தரப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என தெரியவந்துள்ளது. எனவே, கோயிலுக்கு மாற்றுப் பாதை அமைக்க வேண்டும்” என கோரினார்.
அதற்கு பொதுப் பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசுகையில், “ஆன்மிக மக்கள் பயன்பெறும் வகையில் சாலைகளை அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலுக்கு செல்ல மாற்றுப் பாதை அமைப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறையிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று” தெரிவித்தார்.
அப்போது பேரவையில் எதிர்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் பேசுகையில், “திருமங்கலம் நகராட்சியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கப்பலூர் சுங்கச் சாவடி அமைந்துள்ளது. மத்திய அரசின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக இந்த சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் கேள்வி எழுப்பினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. எனவே, இந்த சுங்கச் சாவடியை மத்திய அரசு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
அதற்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசுகையில், “இதுகுறித்து மத்திய அரசுக்கு 3 முறை கடிதம் எழுதியுள்ளோம். உள்ளூர் மக்களால் தினசரி சுங்கக் கட்டணம் செலுத்த முடியாது. எனவே, அவர்களுக்கு சுங்கக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம்” என கூறினார்.