100 நாள் வேலை திட்டத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்தும் பாஜக அரசு: சோனியா காந்தி!

கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்தி வருகிறது என மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நேற்று பேசிய சோனியா காந்தி இதுகுறித்து மேலும் கூறியதாவது:-

பாஜக தலைமையிலான மத்திய அரசு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இது, கண்டனத்துக்குரியது. இந்த திட்டம் கிராமப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் வாழ்வாதாரத்துக்கு முக்கிய பாதுகாப்பு வளையமாக உள்ளது. இதனால்தான் வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் என்பது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போதைய பாஜக அரசு அந்த திட்டத்தை திட்டமிட்டு குழிதோண்டி புதைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதனை எடுத்துக்காட்டும் வகையில் இந்த திட்டத்துக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.86,000 கோடி என்ற அளவில் தேக்க நிலையிலேயே உள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தில் 10 ஆண்டுகளில் மிக குறைவு. பணவீக்கத்தை கருத்தில் கொண்டால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.4,000 கோடி குறைவு.

மேலும், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 20 சதவீதம் முந்தைய ஆண்டு நிலுவை தொகையை செலுத்துவதற்கே சரியாக இருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இதுதவிர, ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா, நேஷனல் மொபைல் மானிட்டரிங் சிஸ்டம், கூலி வழங்குவதில் தாமதம், பணவீக்கத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு கூலி உயர்வு இல்லாதது போன்றவற்றால் இந்த திட்டம் ஏராளமான சவால்களை ஏற்கெனவே சந்தித்து வருகிறது.

எனவே, 100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கப்படும் ஊதியம் நாளொன்றுக்கு 400-ஆக அதிகரிக்கப்படுவதுடன் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதனை வழங்க வேண்டும். அதேபோன்று, வேலைபெறும் நாட்களின் எண்ணிக்கையையும் ஆண்டுக்கு 100-லிருந்து 150-ஆக அதிகரிக்க வேண்டும். எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டத்தில் கண்ணியமான வேலைவாய்ப்பு மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கைகள் அத்தியாவசியமானது. இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.