நீதிபதி, நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பேசியதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருக கணேசன் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மத நல்லிணக்கக் கூட்டம், ஊர்வலம் நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த நீதிபதி, இரு பிரிவினரிடையே பிரச்சினை நிலவுகிறது. பங்குனித் திருவிழா நடக்கும் நிலையில் கூட்டம் நடத்த அனுமதித்தால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, அனுமதி மறுத்தார்.
இந்நிலையில், மதுரையில் கடந்த 9-ம் தேதி மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், உயர் நீதிமன்ற நீதிபதியையும், நீதிமன்றத்தையும் விமர்சித்துப் பேசியுள்ளார். மக்கள் பிரதிநிதியான அவர், அரசியலமைப்புச் சாசன சட்டத்தைப் பாதுகாக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையிலும், சாமானிய மக்களின் நம்பிக்கையாக விளங்கும் நீதிமன்றத் தீர்ப்பின் மீது அவநம்பிக்கையை உண்டாக்கும் வகையிலும் பேசியது அதிர்ச்சியளிக்கிறது.
சுய ஆதாயம் பெறும் உள்நோக்குடன் தீர்ப்பு வழங்கியதாகவும், தீர்ப்பை அவமதிக்கும் வகையிலும் அவதூறு பரப்பியுள்ளார். பொது வெளியில் ஆதாரம், ஆவணமின்றி உயர் நீதிமன்ற நீதிபதியைப் பேசியது நீதிமன்ற அவமதிப்பாகும். தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கும். எனவே, நீதிமன்றம், நீதிபதி மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி. மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் முருக கணேசனிடம் கேட்டபோது, “எம்.பி.க்கு எதிராக கடந்த 13-ம் தேதி ஆன்லைன் மூலம் மதுரை மாநகர காவல் ஆணையருக்குப் புகார் அனுப்பினேன். இதனடிப்படையில், எழுத்துப் பூர்வமாக மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு ஆய்வாளர் மோகன் என்னை அழைத்தார். அதன்படி புகார் கொடுத்துள்ளேன்” என்றார்.