தமிழக பட்ஜெட்டை வரவேற்றதில் வேறு அரசியல் காரணம் இல்லை: பிரேமலதா விஜயகாந்த்!

தேமுதிக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற்றதால், அதை வரவேற்றோம். வேறு அரசியல் காரணம் இல்லை என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது 56-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள கடசியின் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். அதன்பின் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது அவரது மகன் விஜய பிரபாகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். இதேபோல், சாலிக்கிராமத்தில் உள்ள தனது இல்லத்திலும் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:-

எனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தேமுதிகவினர் கொண்டாடிவருகிறார்கள். இந்த புகழ் அனைத்தும் தேமுதிக தலைவர் மறைந்த விஜயகாந்த் உடையது. அவர் தெய்வமாக இருந்து எங்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறந்துள்ளளோம். அரசியல் கட்சி தலைவர்களின் வாழ்த்துக்களை மனப்பூர்வமாக ஏற்கிறேன். அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

தேமுதிகவின் 2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அம்சங்களைதான் தற்போது திமுக தனது பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளது. அதனால்தான் அதை ஆதரித்து வரவேற்கிறோம். இதில் எந்தவிதமான அரசியலும் கிடையாது. ஒரு நல்ல விஷயம் நடந்தால் ஆதரிக்கிறோம். தவறு நடந்தால் அதை சுட்டிக்காட்டுகிறோம். மும்மொழி கொள்கையை பொருத்தவரை தாய்மொழி காப்போம். அனைத்து மொழிகளையும் கற்போம் என்று விஜயகாந்த் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த வழியில் தான் நாங்கள் பயணிக்கிறோம்.

தமிழகம் முழுவதும் தமிழ் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்பதை அரசுக்கு வேண்டுகோளாக வைக்கிறேன். தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் ஒரு தொகுதியை மத்திய அரசு குறைத்தால் கூட மக்களுக்காக தமிழக அரசுடன் இணைந்து அதை எதிர்ப்போம். மேலும், மாநிலங்களவை சீட் தொடர்பாக மீண்டும், மீண்டும் அதே கேள்வியை கேட்கிறீர்கள். இதற்கான பதிலை நான் பல்வேறு இடங்களில் சொல்லிவிட்டேன். அதேபோல், தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அடுத்த ஆண்டு பிறந்த நாளில் கூட்டணி குறித்து உறுதியாக அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கிடையே பிரேமலதாவின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். இதுதவிர அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன், தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் பிரமுகர்களும் பிரேமலதாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.