நக்சல்கள் 22 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி: அமித் ஷா!

நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான தனது பயணத்தில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றொரு பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இன்று காலை சத்தீஸ்கரில் நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் நக்சல்கள் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் காவலர் ஒருவர் வீர மரணடைந்துள்ளார். பிஜப்பூர் மாவட்டத்தில் 18 நக்சல்களும், கான்கர் பகுதியில் நான்கு மாவோயிஸ்டுகள் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) மற்றும் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படை (DRG) ஆகியவற்றின் கூட்டுக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கிகள், ஆயுதங்கள், வெடிபொருள்கள் மீட்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவில் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

நக்சல்கள் சரணடை அனைத்து சந்தர்பங்களும் வழங்கப்பட்ட போதிலும் சரணடையாத தீவிரவாதிகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசு இரக்கமற்ற அணுகுமுறையைச் செலுத்தி வருகின்றது. பாதுகாப்புப் படையினர் இன்று மற்றொரு பெரிய வெற்றியைக் கண்டுள்ளனர். அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்சல் இல்லாத நாடாக மாறப்போகிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.