சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: 5 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு!

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து கைது செய்துள்ளனர்.

யூடியூபர் சவுக்கு சங்கர், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். சவுக்கு சங்கர் வீட்டில் கடந்த 24 ஆம் தேதி காலை சுமார் 50 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே புகுந்து வீட்டினுள் மலம் மற்றும் கழிவு நீரை கொட்டியது. அதுதொடர்பான சி.சி.டிவியில் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களில் சிலர் தூய்மை பணியாளர்கள் அணியும் சீருடை அணிந்திருந்தனர். இது தொடர்பாக சவுக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “தூய்மை பணியாளர்கள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தியதாகவும் அந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர்கள். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர்” என்று கூறியிருந்தார். மேலும், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தான் தனது வீடு மீதான தாக்குதலுக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி இருந்தார் சவுக்கு சங்கர்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கரின் தாயார், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் குறித்து சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து சவுக்கு சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிபிசிஐடி போலீசார், சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதலில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. 2 பெண்கள் உட்பட கைதான 5 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 5 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தூய்மை பணியாளர்களுக்கு 50 சதவிகித மானியத்துடன் நவீன கழிவு நீர் அகற்றும் ஊர்திகள் வழங்கப்பட்டன. அதோடு 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு கடனுதவியும் வழங்கப்பட்டன. இதுதொடர்பாக சவுக்கு சங்கர் ஒரு வீடியோவில், உண்மையான பயனாளிகளுக்கு இந்தத் திட்டம் சென்று சேரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த வீடியோவில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையும் மற்றொரு நபரும் ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். அதனால் செல்வப்பெருந்தகையின் தூண்டுதலின் பேரில் தூய்மை பணியாளர்கள் என்ற போர்வையில் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்டிருப்பதாக சவுக்கு சங்கர் குற்றம்சாட்டினார். மேலும் இதற்கு சென்னை காவல் ஆணையர் அருண் உடந்தையாக இருப்பதாகவும் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். இதன் காரண இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.