ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்ததில் என்ன தவறு?: உயர் நீதிமன்றம்!

ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தே அதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது என வழக்கு தொடர்ந்துள்ள தனியார் நிறுவனங்களுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் பொருள் இழப்பு மற்றும் உயிரிழப்பு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து தமிழக அரசு கடந்த பிப்.14-ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. அதன்படி ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை விளையாட ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாடக்கூடாது என நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து தனியார் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார்.

அப்போது ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, சஜ்ஜன் பூவையா ஆகியோர் கார் ரேஸ், வீடியோ கேம், கேண்டி க்ரஷ் போன்ற விளையாட்டுகளை ஆன்லைன் மூலமாக விளையாட முடியும் என்ற நிலையில், ரம்மிக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைனில் ரம்மி விளையாட தமிழகத்தைத் தவிர மற்ற எந்த மாநிலங்களிலும் தடை இல்லை. இந்த 5 மணி நேரம் ஆன்லைன் ரம்மிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இது எங்களின் தொழில் உரிமையை பாதிக்கிறது. ஆன்லைன் ரம்மியை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. மத்திய அரசுக்கே உள்ளது. 5 மணி நேரம் விளையாடக்கூடாது என்பது தடை விதிப்பதுதான தவிர, ஒழுங்குபடுத்துதல் ஆகாது என வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மற்ற ஆன்லைன் விளையாட்டுகளால் யாரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதில்லை. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனமுடைவதில்லை. ஆன்லைன் ரம்மியால் சொத்துகளை இழந்து பலர் நிர்கதியாகி விட்டனர். ஆன்லைன் ரம்மியில் தோல்வி அடையும் ஒருவரின் வாழ்வாதாரமே பாதிக்கப்படுகிறதே என்றனர்.

மேலும் தமிழக அரசு தனது மாநில எல்லைக்குள் இருக்கும் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் தனியாக சட்டம் கொண்டு வருவதில் என்ன தவறு இருக்கிறது? அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளும் அடிமைப்படுத்தும் வகையில் இருப்பதில்லை. ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தே அதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கும் நேரக்கட்டுப்பாடுகள் உள்ளது என கருத்து தெரிவித்து விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்துள்ளனர்.