ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் 2012 முதல் 2020 வரை ஜப்பானின் பிரதமராக பணியாற்றினார். இந்நிலையில், அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபே இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். சாலை பகுதியில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் அபே பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ஒரு நபர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அபே மீது சுட்டார். அபேவின் முதுகுப்பக்கம் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்து மயங்க நிலையில் இருந்த ஷின்சோ அபேயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ஷின்சோ அபேக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.