ரஷ்யா – இந்திய வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை!

ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் ரஷ்யா – இந்திய வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.

ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்றார். கூட்டத்தின் இடையே, ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்தார். அப்போது இரு நாடுகளின் பரஸ்பர நலன்கள், உக்ரைன் போர் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தி, கருத்துகளை இருவரும் பரிமாறிக்கொண்டனர்.

ஜி20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் ரஷ்யாவின் வெளியுறவு மந்திரியும் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தை தொடங்கிய இந்தோனேசியா, உக்ரைனில் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி கேட்டுக்கொண்டது. போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதுடன், பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காணவேண்டுமே தவிர, போர்க்களத்தில் அல்ல என்றும் இந்தோனேசியா தெரிவித்தது.

உக்ரைனுடன் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் ஐரோப்பிய நாடுகள், உக்ரைன் எங்களுடன் போரிட வேண்டும் என்பதையே விரும்புகின்றன எனவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டி உள்ளார். போர் எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு காலம் எங்களுடன் ஒப்பந்தம் செய்வதும் அவர்களுக்கு கடினமாக இருக்கும் என்பதை ஐரோப்பிய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் புதின் குறிப்பிட்டுள்ளார்.