இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என்றும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பதிலளித்துப் பேசியதாவது:-
முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலத்திட்டங்களும், அனைத்து வகையான சான்றிதழ்களும் வருவாய்த்துறை மூலமாகவே வழங்கப்படுகின்றன. மாதம் 50 ஆயிரம் பட்டா என்ற அளவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 6 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்படும்.
கடந்த 4 ஆண்டுகளில் ரூ.20,365 கோடி மதிப்புள்ள 35,654 அரசு நிலங்களை கையகப்படுத்தியுள்ளோம். ரயில்வே, தேசிய நெடுஞ்சாலை, விமான நிலைய திட்டங்களுக்கு தேவையான நிலங்களை விரைவாக கையகப்படுத்தி கொடுத்து வருகிறோம். அந்த வகையில், மதுரை, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிக்கு தேவையான நிலம் முழுவதும் கையகப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்துக்கு இதுவரை 468 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளோம். கடந்த 4 ஆண்டுகளில் ஒரு கோடியே 11 லட்சம் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடியே 11 லட்சம் பேருக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது.
முதியோர் ஓய்வூதியத்தொகை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுத்திவைக்கப்பட்டதாக அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டார். முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாது. அந்த வகையில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களையும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் விவரங்களையும் ஆய்வுசெய்யும் பணி நடந்ததால்தான் ஜூலை மாதம் வழங்கப்படவில்லை. தற்போது தகுதியான பயனாளிகளுக்கு தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக மேலும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 22 லட்சத்து 59 ஆயிரம் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் இந்த ஆண்டு 24 மாவட்டங்களில் 1,270 முகாம்கள் நடத்த பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் 13 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளோம். ஒரு கோடியே 11 லட்சம் பட்டா மாற்ற பணி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 9 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதித்தொகை வழங்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.
