எப்படியிருந்த அதிமுக பரிதாப நிலைக்கு வந்துள்ளது வேதனையானது: கார்த்தி சிதம்பரம்!

“அதிமுக பல ஆளுமைகள் தலைமை தாங்கிய கட்சி. எப்படியிருந்த கட்சி தற்போது டெல்லிக்கு சென்று கூட்டணி அமைக்கும் பரிதாப நிலைக்கு வந்துள்ளது வேதனையானது.” என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் பாம்பன் பாலம் திறப்பதை வரவேற்கிறேன். வக்பு மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு காங்கிரஸ சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். பெரும்பான்மை மூலமாக வக்பு மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் எதிர்ப்பை ஆழமாக பதிவு செய்துள்ளது. இந்தச் சட்டம் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கும் சட்டமாகவே பார்க்கிறோம்.

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தீர்வு ஏற்பட தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களுடன் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும். இதற்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து இலங்கை பயனத்தின் போது பிரதமர் வலியுறுத்தினாரா? என்பது தெரியவில்லை.

அதிமுக – பாஜக கூட்டணி வேதனை அளிக்கிறது. அதிமுக எப்படி இருந்த கட்சி. அது சாதாரணமான கட்சியில்லை. தமிழகத்தை பல ஆண்டுகளாக ஆண்ட கட்சி. அதிமுகவுக்கு பல ஆளுமைகள் தலைமை தாங்கினார்கள். யாராவது கூட்டணி வைக்க வேண்டுமென்றால் அந்த கூட்டணிக்கு தான் வருவார்கள். ஆனால் தற்போது அதிமுகவினர் டெல்லிக்கு சென்று கூட்டணி வைக்கிறார்கள். திமுக கூட்டணியில் தான் 2026 தேர்தலிலும் காங்கிரஸ் தொடரும். 2026 தேர்தலில் திமுக கூட்டணி அமோகமாக வெற்றிபெறும். இவ்வாறு அவர் கூறினார்.