பிகார் இளைஞர்கள் வேலை தேடி இடம்பெயராதீர்கள்: ராகுல் காந்தி!

பிகார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என வலியுறுத்தி பிகாரின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்து கொண்டு நடந்து சென்றார்.

பிகாரில் இந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆளும் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணிக்கு எதிராக ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் சார்பில் பெகுசராய் நகரில் பேரணி நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தேசிய பொறுப்பாளர் கன்னையா குமாரின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், பிகார் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும், அவர்கள் வேலைதேடி வேறு மாநிலங்களுக்குச் செல்லும் நிலையை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் வலியுறுத்தப்பட்டன.

கன்னையா குமாரின் சொந்த மாவட்டம் பெகுசராய் என்பதாலும், இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்பதாலும் இந்த பேரணி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல் காந்தி ஊர்வலமாகச் சென்றார்.

முன்னதாக இந்த பேரணி குறித்து தனது எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்ட ராகுல் காந்தி கூறியுள்ளதாவது:-

வேலையின்மை, பணவீக்கம், வினாத்தாள் கசிவு, அரசு வேலைகள் குறைப்பு, உங்களுக்குப் பயனளிக்காத தனியார்மயமாக்கல் போன்ற பிரச்சினைகள்தான் நாங்கள் இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கான காரணங்கள்.

பிகார் இளைஞர்களின் உணர்ச்சிகளை உலகம் காணவும், மாநில அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கவும் வெள்ளை டி-சர்ட் அணிந்து எங்களுடன் சேருங்கள். பிகார் இளைஞர்களின் ஆற்றலைத் திரட்டி புதிய பிகாரை உருவாக்க விரும்புகிறோம். பிகார் இளைஞர்கள் இடம்பெயரக்கூடாது, மாறாக தங்கள் சொந்த மாநிலத்திலேயே வேலைவாய்ப்பைப் பெற வேண்டும் என்பதே எங்கள் பயணத்தின் நோக்கமாகும். இந்தப் பயணம் பிகாரின் போராட்டத்தின் குரலும் நம்பிக்கையும் ஆகும். பல ஆண்டுகளாக அநீதியை அனுபவித்து வரும் மாநில இளைஞர்களுக்கு ‘நீதிக்கான உரிமை’ கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த பேரணி குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “அவர் (ராகுல் காந்தி) பேரணி செல்வதற்குப் பதிலாகப் பிராயச்சித்தம் தேட வேண்டும். காங்கிரஸ் 60 ஆண்டுகள் ஆட்சி செய்து வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பியது, ஆனால் அவர்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. நரேந்திர மோடி அரசு 25 கோடி ஏழை மக்களை வறுமைக் கோட்டிற்கு மேல் உயர்த்தியுள்ளது. பெகுசராயில், அவரது தந்தை(ராஜீவ் காந்தி) 1985 ஆம் ஆண்டு பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையைத் திறப்பதாகக் கூறினார், ஆனால் எதுவும் நடக்கவில்லை. பிகாரில் பிரதமர் நரேந்திர மோடியின் சாலைகளையும் நிதிஷ் குமாரின் வளர்ச்சியையும் பார்க்கும்போது அவரது கண்கள் மயங்கிப் போகும்” என்று கூறியுள்ளார்.