சமையல் எரிவாயு விலையை விநியோக நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியுள்ளதாக மத்திய எரிசக்தி அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை.
உஜ்வாலா மற்றும் பொதுப் பிரிவு வாடிக்கையாளர்கள் என இரு தரப்புக்கும் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.503-ல் இருந்து ரூ.553 ஆகவும், பொது பயனர்களுக்கு ரூ.803-ல் இருந்து ரூ.853 ஆகவும் அதிகரிக்கும். இதனிடையே, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. எனினும், சர்வதேச எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விலைக் குறைப்புக்கு ஏற்ப இந்த அதிகரிப்பு சரிசெய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது.
பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது. இந்த வரி அதிகரிப்பு நாளை (ஏப்ரல் 8) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “இன்று கலால் வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்று பொதுத் துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன,” என்று எரிசக்தி அமைச்சகம் எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது.