பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்து சொல்ல வேண்டும்: அமைச்சர் பொன்முடி!

நாம் எந்தத் துறையில், எந்த நிலையில் இருந்தாலும் தங்கராசு பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் வழியில், பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் வனத்துறை அமைச்சர் க.பொன்முடி கேட்டுக் கொண்டார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு கே.தங்கராசு புகைப்படத்தை திறந்துவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

திராவிட இயக்கக் கொள்கைகளை சினிமா மூலம் தங்கராசு பரப்பினார். ரத்தக் கண்ணீர் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். முதலில் நாடகமாகவும், பின்னர் திரைப்படமாகவும் இக்கதை வெளிவந்தது. அந்த திரைப்படத்தின் மூலம் புரட்சிகரமான கருத்துகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்தார்.

தங்கராசுக்கு மட்டுமல்ல அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவருக்கும் பெரியார்தான் வழிகாட்டி. அந்த வரிசையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வந்துள்ளார். சனாதன எதிர்ப்பு குறித்து நீதிமன்றமே கேள்வி எழுப்பினாலும் அதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

இப்படி எல்லோரும் திராவிட இயக்கக் கொள்கையில் உறுதியாக இருப்பதற்கு பெரியார் ஊட்டிய உணர்வே காரணம். நாம் எந்தத் துறையில், எந்த நிலையில் இருந்தாலும் தங்கராசு வழியில் பெரியாரின் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கிப் பேசுகையில், “தமிழக வளர்ச்சியை தடுப்பதற்குத்தான் கங்கணம் கட்டிக் கொண்டு பல்வேறு வகையில் முயற்சிக்கிறார்கள். தலைசிறந்த பேச்சாளர்களான பட்டுக்கோட்டை அழகிரி, தங்கராசு போன்றவர்கள் இல்லாததால் செந்தமிழன் என்று சொல்லிக் கொண்டு பெரியாரையும் திராவிட இயக்கத்தையும் விமர்சிக்கிறார்கள். எதிர்ப்பு எந்த வகையில் வந்தாலும், நாம் விழிப்போடு அதை எதிர்கொள்ள தங்கராசுவின் நூற்றாண்டு விழாவில் நாம் உறுதியேற்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.