யானை வேட்டை விவகாரத்தில் இளைஞர் மர்ம மரணம்: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்!

தருமபுரி மாவட்டம் ஏமனூர் காப்புக் காட்டில் யானை வேட்டை தொடர்பாக கைதாகி தப்பிச்சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட வனப்பகுதியில் பென்னாகரம் நீதிபதி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனச்சரகம் ஏமனூர் காப்புக்காடு பகுதியில் கடந்த பிப்.27-ம் தேதி ஆண் யானை ஒன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் மார்ச் 17-ம் தேதி 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

18-ம் தேதி மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், கைதான ஏமனூர் அடுத்த கொங்கரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் குமார் (31) என்பவரை வேட்டை குறித்து விவரிக்க 18-ம் தேதி வனப்பகுதிக்கு வனத்துறையினர் அழைத்துச் சென்றனர். இந்நிலையில், வனப்பகுதியில் இருந்தபோது செந்தில்குமார் கைவிலங்குடன் தப்பிச் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, மார்ச் 19-ம் தேதி செந்தில்குமாரின் மனைவி சித்ரா, தன் கணவர் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே கடந்த 4-ம் தேதி ஏமனூர் காப்புக்காட்டில் தூதர்திட்டு என்ற இடத்தில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பது தெரிய வந்தது. சடலத்தின் மீது நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் கிடந்தது. அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தார், அந்த உடல் செந்தில் குமார்தான் என உறுதி செய்தனர். தொடர்ந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செந்தில்குமார், வழக்கு பயம் காரணமாக தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என வனம், காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செந்தில் குமாரின் மனைவி சித்ரா, ஏற்கெனவே தன் கணவரை கண்டுபிடித்து தர வேண்டுமென காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஏரியூர் காவல் நிலையத்தின் வேண்டுகோளின்படி, உடற்கூராய்வுக்கு தொடர்புடைய சாட்சியங்களை பென்னாகரம் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிபதி விஜயராணி (எ) நாகலட்சுமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், செந்தில்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்ட தூதர்திட்டு பகுதி, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது வனப்பகுதியில் தப்பிச் சென்றதாக வனத்துறையினர் தெரிவிக்கும் பகுதி ஆகிய இடங்களில் நீதிபதி ஆய்வு நடத்தினார். இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார்.

இதற்கிடையே, செந்தில்குமார் வனத்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி தொடர்ந்த வழக்கு விசாரணை, உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக நேற்று நடந்தது. அப்போது, செந்தில்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை இன்று தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு(ஏப்.8) தள்ளிவைத்துள்ளார். அதுவரை உடலை பத்திரப் படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.