ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்: ப.சிதம்பரம்!

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பை வரவேற்கிறேன் என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து, பல்வேறு கட்சி உறுப்பினர்களும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வருகின்றனர்.

அந்த வகையில், இன்று உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு ஆளுனரின் செயல் செல்லாது என்று அறிவித்த தீர்ப்பை முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றி, மீண்டும் வலியுறுத்திய, வரைவுச் சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் மறுத்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் சாசனத்தில் ஆளுனரின் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த வரம்பை மீறி ஆளுனர் செயல்பட்டது தவறு என்ற பல சட்ட வல்லுனர்கள் சுட்டிக் காட்டினர், ஆளுனர் பொருட்படுத்தவில்லை. ஆளுனரின் செயல்கள் அரசியல் சாசனப்படித் தவறு என்று ஆளுனரும் மத்திய அரசும் இப்பொழுதாவது உணர்ந்தால் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.