காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா திருமதி தமிழிசை அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர், ஐயா திரு. குமரி அனந்தன் அவர்கள், இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர். பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.
தலைசிறந்த தேசியவாதியான ஐயா திரு. குமரி அனந்தன் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. தகப்பனாரை இழந்து வாடும் அக்கா திருமதி தமிழிசை அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.