குமரி அனந்தனின் உடல் கே.கே.நகர் அரசு மின் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சிதைக்கு அவரது மகன் கீதன் தீ முட்டினார். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் (வயது 93) உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகஸ்தீஸ்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் – தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி குமரி அனந்தன் பிறந்தார். காமராஜரின் சீடராக விளங்கிய அவர், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.
மக்கள் நலனுக்காக 17 முறை நடைப்பயணம் மேற்கொண்டார். அவரது நடைபயண போராட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சார தி்ட்டம் வந்தது. இலக்கியச் செல்வராகவும், மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். 1977-ல் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். மக்களவையில் தமிழில் பேசுவதற்கான அவரது தொடர் முயற்சியால் 1978-ல் நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைக்கு 1980, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பனைவளம் பெருக முழங்கினார். நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது உள்ளிட்ட 29 நூல்களை எழுதியுள்ளார். அவருக்கு கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில் அண்மைக் காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு (ஏப்.8) காலமானார். அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள மகள் தமிழிசையின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி தமிழிசைக்கு ஆறுதல் கூறினர். மேலும் சட்டப்பேரவையில் பேரவைத் தலைவர் மு.அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார். தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். குமரி அனந்தன் திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று முதல்வர் அப்போது அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து குமரி அனந்தனின் உடல் கே.கே.நகர் அரசு மின் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. சிதைக்கு அவரது மகன் கீதன் தீ முட்டினார். 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.