வக்பு மசோதா குறித்து ராகுல் பேசாதது ஏன்?: மாயாவதி கேள்வி!

மக்களவையில் நடைபெற்ற வக்பு சட்டதிருத்த மசோதா மீதான நீண்ட விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்று பேசாதது ஏன்? என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார்.

வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த 5-ம் தேதி ஒப்புதல் அளித்தார். வக்பு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாயாவதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் மாயாவதி கூறியிருப்பதாவது:-

வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி கண்டனம் தெரிவித்தாலும், அவையில் இந்த மசோதா குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றபோது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் இது குறித்து பேச வேண்டாம் என முடிவு எடுத்தது நியாயமா?

எது எப்படியோ, இட ஒதுக்கீடு உரிமையை பயனற்றதாக்கி, பட்டியலின மக்களின் நலன், அரசு வேலைகள், கல்வி ஆகியவற்றை பறித்த குற்றம் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் உள்ளது. இந்த இரு கட்சிகளின் வஞ்சனையிலிருந்து தப்பிக்க வேண்டிய தேவையை சிறுபான்மையினர் உணர்வது முக்கியம். இந்த கட்சிகளின் உத்திகளால், பட்டியலின மக்கள், சிறுபான்மையினர், அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.