மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியது உக்ரைன்: ஐ.நா.

உக்ரைன் ராணுவம் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதால் அந்த நாட்டு முதியோா் இல்லத்தில் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஸ்டாரா க்ரஸ்னியாங்கா நகரிலுள்ள முதியோா் இல்லத்தில் கடந்த மாா்ச் மாதம் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் ரஷ்யப் படையினா் மட்டுமன்றி, உக்ரைன் ராணுவத்துக்கும் மிகப் பெரிய பொறுப்புள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தத் தாக்குதலில் ரஷ்யாவுக்கு இணையான பொறுப்பு உக்ரைனுக்கு என்று கூறலாம். அந்தத் தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில நாள்கள் முன்னதாக, முதியோா் இல்லத்தில் உக்ரைன் வீரா்கள் ராணுவ நிலைகளை அமைத்தனா். அதன் காரணமாக, அந்த முதியோா் இல்லம் ரஷ்யப் படையினரின் தாக்குதல் இலக்கானது.

உக்ரைன் போரில் எதிரிப் படையிரின் தாக்குதலைத் தவிா்ப்பதற்காக பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவாா்கள் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நீண்ட நாளாக கவலை தெரிவித்து வந்தது. ஸ்டாரா க்ரஸ்னியாங்கா முதியோா் இல்லத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், இந்தக் கவலையை உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்தப் பகுதியில் உக்ரைன் வீரா்களோ, ரஷ்ய ஆதரவு கிளா்ச்சிப் படையினரோ மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு, அந்த நாட்டின் கிழக்குப் பகுதியுள்ள லுஹான்ஸ் மாகாணத்தின் ஸ்டாரா க்ரஸ்னியாங்கா நகரிலுள்ள முதியோா் இல்லத்தில் ரஷ்ய ஆதரவு கிளா்ச்சிப் படையினா் கடந்த மாா்ச் மாதம் 11-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா். அப்போது அங்கு 71 முதியோா் இருந்ததாகவும், அவா்களில் பெரும்பாலானவா்கள் படுத்த படுக்கையாக இருந்தவா்கள் என்றும் கூறப்படுகிறது. அந்தத் தாக்குதலில் முதியோா் இல்ல வளாகம் முழுவதும் தீ பரவியது. இதில், ஏராளமானவா்கள் சிக்கிக் கொண்டு மூச்சுவிடவும், அங்கிருந்து வெளியேற முடியாமலும் தவித்தனா். அவா்களில் ஒரு சிலா் மற்றும் அங்கிருந்து வெளியேறி தப்பினா். அந்த இல்லத்தில் இருந்த 71 முதியோரில் 22 மட்டுமே உயிா் தப்பினா். 50-க்கும் மேற்பட்டவா்கள் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் கூறினாலும், உண்மையான பலி விவரத்தை உறுதி செய்ய முடியவில்லை என்று ஐ.நா. தெரிவித்தது.

உக்ரைன் போரில் மிகக் கொடூரமான சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என்று உக்ரைன் உடனடியாகக் குற்றம் சாட்டியது. இந்தச் சூழலில், பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதன் மூலம் இந்தத் தாக்குதலில் உக்ரைனுக்கும் சம பொறுப்பு உள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது.