‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், அம்பேத்கர் விரும்பிய சமத்துவ இந்தியாவை கண்டே தீருவோம் என்று சமத்துவ நாளை ஒட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2022-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி இன்று தமிழகத்தில் சமத்துவ நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், சமத்துவ நாளை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது:-
சாதி எனும் ஆயிரமாண்டு அழுக்கினை அறிவெனும் தீப்பந்தம் கொண்டு பொசுக்கிய புரட்சியாளர் – தனக்குவமை இல்லாத புத்துலகப் புத்தர் சட்ட மாமேதை அம்பேத்கர் பிறந்தநாள், சமத்துவ நாள்.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நம் பயணத்தில் என்றும் நம்மை வழிநடத்தும் அறிவுலகச் சூரியன் அம்பேத்கர் வாழ்க!
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கிய நமது திராவிட மாடல் பயணத்தில், பாபாசாகேப் விரும்பிய சமத்துவ இந்தியா கண்டே தீருவோம்! ஜெய் பீம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.