உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் ஐந்தாவது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரினால் இருதரப்பின் உயிர், பொருட்சேதங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தாலும், போரை கைவிட இரண்டு நாடுகளும் தயாராக இல்லை. ரஷ்யாவுக்கு உக்ரைன் தக்க பதிலடி கொடுத்து வந்தாலும், பெரும்பாலான நாட்களில் போரின்போது ரஷ்யாவின் கைகளே ஓங்கி உள்ளது.
இதனிடையே, கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் குடியிருப்பு பகுதி மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பலத்த சேதமடைந்தது.
இந்த தாக்குதலின் விளைவாக கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 25-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.