வக்பு சட்டம் முஸ்லிம்களை பாதுகாக்கவா?.. சொத்துகளை பறிக்கவா?: ப.சிதம்பரம்!

அனைத்து இந்து மக்களும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் கூறினார்.

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:-

வக்பு வாரிய திருத்த சட்டம் முஸ்லிம்களுக்கு நன்மை தரக்கூடியது என்றால் அந்த சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பாக முஸ்லிம்களை அழைத்து பிரதமர் பேசினாரா? இந்த சட்டம் ஏழை, எளிய முஸ்லிம்களை பாதுகாக்கவா? அல்லது முஸ்லிம்களின் சொத்துகளை பறிக்கவா?. இந்த திருத்த சட்டத்தில், வக்பு வாரியத்தில் முஸ்லிம்கள் அல்லாதவர்களும் உறுப்பினராக இருக்க வேண்டும் என்று உள்ளது. இது முஸ்லிம்கள் மீதான தாக்குதல். இது முஸ்லிம் சமூகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால்.

இந்த சட்டத்திற்கு எதிராக நல்ல தீர்ப்பு கிடைக்கும். அதாவது, இச்சட்டம் முஸ்லிம்களுக்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே முஸ்லிம்கள் தெருவில் இறங்கி போராட வேண்டாம். உங்களுக்கு ஆதரவாக இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளன. முஸ்லிம்கள் தங்களுக்கு யாரும் இல்லை என்று பயப்பட வேண்டாம். இங்குள்ள அனைத்து இந்து மக்களும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.